தெலங்கானாவில் தெரு நாய்கடியால் பாதிக்கப்படும் மக்கள் தற்போது நடிகை அமலா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களாக கேரளா தமிழ்நாடு போன்ற இடங்களில் வெறிநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருநாய்களால் தாக்கப்பட்ட வீடியோக்களை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் இந்த தெரு நாய்கள் விட்டு வைப்பதில்லை.

இந்த நிலையில், தெலங்கானாவில் பொதுமக்களை கடிக்கும் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பணியை தற்போது நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஏன் தெரியுமா? அதற்கு முழு காரணம் நடிகை அமலா என கூறப்படுகிறது. தமிழ் திரை உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா தெலுங்கு படங்களிலும் நடித்து நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா தற்போது பிராணிகள் பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தெருநாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பும் பெற்றுள்ளார். இதனால் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர்
அந்த பணிகளை நிறுத்திவிட்டனர். இதனால் தெருநாய் கடியில் சிக்கும் மக்கள் நடிகை அமலாவுக்கு எதிராக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடிக்கும் தெருநாய்களை அமலா வீட்டின் முன்னால் கொண்டுபோய் விடவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.