தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தகவல் தொலைத்தொடர்பு (Communication) மிக வேகமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒருவருக்கு ஒரு தகவலை பகிர வேண்டுமென்றால், குறிப்பிட்ட கால நேரம் தேவைப்படும். ஆனால், தற்போது அப்படி இல்லை. ஒருவர் மற்றொருவரை மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவரை நொடி பொழுதில் தொடர்பு கொள்ள முடியும். இதற்காக பல தொலைத்தொடர்பு செயலிகள் உள்ளன.
அந்த வகையில், உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி தான் கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail). ஜிமெயில் செயலியை பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுடன் வேலை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தி வருகிறது. மற்ற செயலிகள் இருந்தாலும், ஜிமெயில் சற்று பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தான், ஜிமெயில் பயனர்களுக்கு புதிய வகை மோசடி குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. Google Sites ஐ பயன்படுத்தி, நம்பகமானதாக தோன்றும் போலியான மின்னஞ்சல்களை அனுப்பி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த மின்னஞ்சல்கள், “no-reply@google.com” என்பது போன்ற முகவரியில் இருக்குமாம். எனவே, இந்த மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க, பயனர்கள் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தப்பிப்பது எப்படி..?
* மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை நேரடியாக கிளிக் செய்ய வேண்டாம். அதற்கு முன் முகவரிகளை கவனமாக பார்க்க வேண்டும்.
* உங்கள் ஜி-மெயின் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.
* உங்கள் கணக்குக்கு கூடுதல் பாதுகாப்பாக, இரு அடுக்கு அங்கீகாரத்தை இயக்கவும்.
* சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம். அவற்றை டெலிட் செய்துவிடுவது நல்லது.
* Google-ன் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.