Plastic: இன்றைய நவீன கால கட்டத்தில் சமையலறை மட்டுமல்ல அங்கு பயன்படுத்தும் பொருட்களும் நவீனமாகி வருகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் காய்கறிகளை நறுக்க கத்திகளை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது காய்கறிகளை நறுக்க கத்திகளையும், பலகைகளையும் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் நாம் சமையலை ஆரம்பிப்பதற்கு முன்பு, தேவையான காய்கறிகளை ஒரு மரத்தாலான பலகை மீது வைத்து நறுக்கி (Chopping) எடுப்பது வழக்கம்.
இப்பலகை ஒரு முக்கியமான சமையலறை உபகரணம் ஆகும். ஆனால் இந்த காய் நறுக்க பயன்படும் பலகை தற்போது நிறைய விதங்களில் மற்றும் வித விதமான பொருட்களால் ஆன பலகைகள் வலம் வருகிறது. உதாரணமாக நீங்கள் பிளாஸ்டிக்கால் ஆன பலகைகளை வாங்கினால் கத்தியால் காய்கறிகளை நறுக்கும் போது அதில் நிறைய கீறல்கள் எழ வாய்ப்புள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் துகள்கள் நம் உடலுக்குள் செல்லும்.
பொதுவாக, மரச் சாமான்கள் ஈரத்தை உறிஞ்சிகொள்ளும் குணம் கொண்டவை. தக்காளி, சிக்கன், இஞ்சி, பூண்டு போன்ற உணவுப் பொருள்களை மரப்பலகை மீது வைத்து நறுக்கும்போது அதன் ஜூஸ், ஆயில் போன்ற திரவங்கள் வெளியேறி பலகைக்குள் உறிஞ்சப்பட்டுவிடும். நம் நாட்டு கதகதப்பான சூழ்நிலை பலகைக்குள் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் தோன்றி வளர உதவி புரிவதாகிவிடும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இப்பலகையை உபயோகித்து வரும்போது அதில் சிறு சிறு கீறல்கள், ஓட்டைகள் உண்டாக வாய்ப்பாகும். பிறகு அவை சல்மோனெல்லா, ஈ கோலி, லிஸ்டேரியா போன்ற தீங்கிழைக்கும் நோய்க் கிருமிகளின் வசிப்பிடமாக மாறிவிடும்.
இக்கிருமிகள் நம் உணவுகளை மாசடையச் செய்து உணவு வழி நோய் பரவ வகை செய்துவிடும். மேலும், அப்பலகையிலிருந்து சிறு சிறு மரத் துகள்கள் பிரிந்து உணவுடன் உடலுக்குள் செல்லும்போது ஜீரணப் பாதையில் கீறல்கள் மற்றும் அசௌகரியங்களை உண்டுபண்ணக் கூடும். இதுவே வார்னிஷ் செய்யப்பட்ட பலகையாயிருந்தால் இரசாயனம் உள்சென்று உடலுக்குள் நச்சுக்கள் உருவாகவும் வாய்ப்பாகும். இதுபோன்ற பலகைகள் முறையாக சுத்தப்படுத்தப்படாவிட்டால், இரைப்பை குடல் பாதையில் நோய்க் கிருமிகள் புகுந்து காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, டீஹைட்ரேஷன், குமட்டல் போன்ற நோய்களின் அறிகுறிகளைக் காட்ட ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இந்நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
இப்போதெல்லாம் பலரும் காய்கறிகள் நறுக்க பிளாஸ்டிக் ஷாப்பிங் போர்டை பயன்படுத்துகிறார்கள், இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். காய்களை நறுக்கும்போது கத்தி பட்டு போர்டும் சேதமாகிறது, அப்போது துண்டாகும் பிளாஸ்டிக் துணுக்குகள் உணவில் கலக்கின்றன. அப்போது ஏற்படும் பள்ளங்களில் பாக்டீரியாக்கள் வளர்வதால் அதுவும் நோய்களை உண்டாக்குகிறது. இதனால் ஹார்மோன் பாதிப்பு, உடல் பருமன், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.