தபால் அலுவலகங்கள் மக்களுக்காக வழங்கும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக உங்களுக்கான வழக்கமான வருமானத்தை நீங்கள் எவ்வித தடையும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நிலையான தொகையை தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அவ்வாறு டெபாசிட் செய்வதன் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் வட்டி விகிதத்தில் வருமானம் கிடைக்கப் பெறும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து விடும். 5 வருடங்களில் இத்திட்டம் முதிர்ச்சியடைந்த பின் உங்களது பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, தபால் அலுவலகத்தின் இத்திட்டத்தில் நீங்கள் ஒருமுறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை நீங்கள் வருமானமாக பெற்று பயன்பெறலாம்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கான டெபாசிட் வரம்பை அரசாங்கம் ரூ.9 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் கால்குலேட்டரின் படி ரூ.2 லட்சத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 5 வருடங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.73,980 வட்டி கிடைக்கும். இதை 60 மாதங்களாக பிரித்தால் மாதந்தோறும் பெறப்படும் தொகை வரும். அதாவது இத்திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்கள் வீதம் மாதந்தோறும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1,233 கிடைக்கும்.