ராஜஸ்தானில் ஓடும் காரில் நாயை கட்டி சாலையில் இழுத்துச் சென்று மருத்துவர் கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ரஜ்னீஷ் குவாலா. இவர் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகின்றார். நேற்று நாய் ஒன்றை காரில் கட்டி தர தர வென இழுத்துச் சென்றுள்ளார். அதை வீடியோ எடுத்த நபர்கள் சமூக வலைத்தலங்களில் பதிவிட்டார். இதையடுத்து அந்த வீடியோ வைரலானது.
நாயை ஓடும் காரில் கட்டி இழுத்துச் சென்று வதை செய்தது குறித்து விலங்குகள் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜ்னிஷ் குவாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். எனவே புகாரின்அடிப்படையில் ரஜ்னிஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது விலங்குகள் வதை தடுப்பின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவில் , வெள்ளை நிற காரில் , நாய் கட்டப்பட்டு அந்த கார் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. காரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நாய் சாலையின் இருபுறத்திலும் இங்கும் அங்குமாக அலைபாய்ந்து கொண்டே செல்கின்றது. இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.