அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் என்றால் கட்டாயம் அது வாழைப்பழங்கள் தான். மற்ற பழங்களை விட விலை கம்மியாக கிடைப்பதால், இந்த பழத்தை பெரும்பாலும் பலர் வாங்கி சாப்பிடுவது உண்டு. இந்தப் பழத்தில், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு. அதில் குறிப்பாக, செவ்வாழைப் பழம், நேந்திரம் பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் சொல்வது உண்டு.
இது உண்மையா, இல்லையா? என்பதை குறித்து மருத்துவர் கார்த்திகேயன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “செவ்வாழைப் பழம், சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. இதனுடன் நாம் எடுத்துக்கொள்ளும் மற்ற உணவுகள் தான் நமது உடல் எடை கூடுவதைத் தீர்மானிக்கும். இதனால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரிக்காது.
இப்படி தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, ரத்தசோகை பிரச்னை போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது. அதே போல் தான் நேந்திரம் பழமும். நேந்திரம் பழம் உடலுக்கு பல நன்மைகளை தரும்.
ஆனால் அதை சிப்சாக சாப்பிட்டால் நமது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. பொதுவாக, நாம் சாப்பிட்ட பிறகு, வேகமாக சர்க்கரை அளவு அதிகரிப்பதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்று கூறுவார்கள். அந்த வகையில், செவ்வாழைப்பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 45%. அதே சமயம் நேந்திரம் பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 51% . எந்த ஒரு உணவிலும் அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 55-க்கு குறைவாக இருந்தால், அதை சர்க்கரை நோயாளிகள் தாரளமாக சாப்பிடலாம்.
இந்த இரண்டு பலன்களும், பசியைத் தூண்டும் என்பதால், இவைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசி அதிகம் எடுக்கும் போது, அவர்கள் கட்டாயம் அதிக உணவு சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். எந்த நோயும் இல்லாமல், ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 1 வாழைப்பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், வாரத்திற்கு 2 முறை மட்டும் தான் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம்.