ஆந்திர பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவருக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை வயிற்றில் வைத்து தைத்த சம்பவம் எட்டு மாதங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் மசூலிணி பட்டினத்தைச் சார்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை சிகிச்சைக்காக நாடியிருக்கிறார் . அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பப்பை சேதமடைந்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அந்த மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து அவரது வீட்டிற்கு வந்து நலமுடன் இருந்திருக்கிறார்.
சில காலம் பின்னர், மீண்டும் அவருக்கு வயிற்று வலி தொந்தரவு ஆரம்பமாகி இருக்கிறது. இதன் காரணமாக விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் இருந்த அந்த பொருள் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக சர்ஜிகல் க்ளாத் எனப்படும் ஒரு மீட்டர் நீளம் உள்ள துணியை வயிற்றில் வைத்து தைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் 8 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண்ணிற்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது எனவும் தற்போது அந்த துணியை அகற்றி விட்டோம். அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம் விரைவில் அவர் குணமடைவார் எனவும் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு முன் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது அலட்சியம் தொடர்பாக புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.