சென்னை நகரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1947 ஆம் ஆண்டு “சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் 1961 ஆம் ஆண்டில் “தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்” என ஒரு முழுமையான அமைப்பாக வளர்ந்தது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுத் துறையில் அதிகரித்து வரும் தேவை வேலை வாய்ப்புகளைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதற்கு வழிவகுக்கிறது.
தற்பொழுது அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் 428 கோடி ரூபாய் செலவில் 3,276 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதில் செம்மஞ்சேரி பகுதியில் 144 வீடுகளும், மீதமுள்ள வீடுகள், பெரும்பாக்கம் பகுதிகளில் கட்டப்படுகின்றன. கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது. இந்த வீடுகள், பகிங்ஹாம் கால்வாய் கரையோரம் மற்றும் இதர நீர்நிலையில் வசிக்கும் நண்பர்களுக்காக கட்டப்பட்டு வருகின்றன. இந்த குடியிருப்புகளை காட்டி, அதில் வீடு வாங்கி தருவதாக கூறி, புரோக்கர்கள் சிலர் வீடு இல்லாத ஏழை மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
வாரியம் வழங்குவது போல், போலி ஆணை தயாரித்து மோசடி நபர்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளர். அரசு சார்பில் எந்த பணமும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே பொதுமக்கள் பணம் கொடுத்து புரோக்கர்களிடம் ஏமாற வேண்டாம் என வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.