தமிழக அரசு நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? என தமிழக அரசுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற தேவையில்லை. மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு மானியம் வழங்குகிறது. தேவை எனில் பெற்றுகொள்ளலாம்.
தமிழக அரசு, மின் தட்டுபாட்டை செயற்கையாக ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா, என்று கேள்வி எழுப்பினார். மேலும் வரும் 23- ஆம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.