திரையரங்குக்கு படம் பார்க்க வரும் பெற்றோர்கள் தங்களது கைக்குழந்தைகள் மற்றும் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளையும் உடன் அழைத்து வருவது வழக்கம். படத்தில் வரும் சத்தத்தை கேட்டு அந்த குழந்தைகள் அழுவதும் வழக்கம். இப்படியான சூழலின் போது குழந்தைகளின் உரிமையாளர்களை மற்ற பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் அந்த குழந்தையை வெளியே அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தச் சொல்வது தொடர்ந்து நடப்பதுண்டு. இப்படியான சம்பவங்களை தடுக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவகம் ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இனி அனுமதிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறது.
நியூ ஜெர்சியில் உள்ள நெட்டிஸ் ஹவுஸ் ஆஃப் ஸ்பகெட்டி என்ற உணவகம்தான் இந்த முடிவை அறிவித்துள்ளது. அதில், மார்ச் 8ஆம் தேதி முதல் 10 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுடன் வருவோரை தங்களது உணவகத்தில் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இடப்பற்றாக்குறையை காரணமாக கொண்டாலும் குழந்தைகள் எழுப்பும் சத்தம் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் அசவுகரியத்தை கொடுப்பதாக இருக்கிறது. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது.
மேலும், “எங்களுக்கும் குழந்தைகள் என்றால் பிரியமே. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், குழந்தைகளுக்கென எங்களது நெட்டிஸ் உணவகத்தில் இடத்தை பராமரிப்பது சற்று சவாலாகவே உள்ளது. ஆகையால்தான் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே புது பாலிசி கொண்டு வந்திருக்கிறோம். இந்த முடிவு உங்களுக்கு சற்று வருத்தத்தை கொடுக்கும். ஆனால், வணிக ரீதியாக இதுதான் எங்களுக்கு சரியான முடிவாக இருக்கும்” என்று நெட்டிஸ் நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.