தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சவடி எண் 138, 139-ல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது..
2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன..
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சவடி எண் 138, 139-ல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.. அதே போல் இடையன்காட்டு வலசு வாக்குச்சாவடியிலும் திமுக பணப்பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது.. வெளி மாவட்ட திமுகவினர் வாக்காளுருக்கு பணம் கொடுத்தது தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.. இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்..