நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று தான் பால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிப்பது நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பசு அல்லது எருமை உண்ணும் புல்லில் உள்ள பாக்டீரியாக்கள் பாலில் சேர்க்கின்றன. பச்சைப் பால் உட்கொள்ளும் போது பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பாலை காய்ச்சி குடிக்க வேண்டும்.
அதே சமயம், நாம் பாலை முறையாக காய்ச்சினால் மட்டுமே பாலில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும். பால் காய்ச்சுவதில் என்ன இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பாலை மிதமான தீயில் வைத்து காய்ச்சும் போது அதில் உள்ள நீர் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை ஒன்றாக வைக்க உதவுகிறது. அதனால் நாம் குறைந்த தீயில் வைத்து பாலை காய்ச்ச வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
பாலை அதிக தீயில் வைத்து காய்ச்சுவதால், அதிலுள்ள இயற்கை சர்க்கரை விரைவில் எரித்துவிடும். இதனால் உடலுக்கு அந்த சத்துக்கள் கிடைக்காது. பால் காய்ச்சும் போது, பாத்திரத்தின் விளிம்பை சுற்றி நீர்க்குமிழிகள் உருவாகும் போது தீயை அணைத்துவிடுங்கள். பாலை அதிகமாக சூடாக்கும் போது அதில் இருக்கும் புரதம் குறைய வாய்ப்பு உள்ளது. அது மட்டும் இல்லாமல் பாலின் நிறமும் சுவையும் மாறும். இதனால் பாலை குறைந்த தீயில் வைத்து காய்ச்சும் போது, பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதோடு சுவையாகவும் இருக்கும்.