மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ.573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழ்நாட்டிற்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், அதை நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றி சுமார் 48 ஆண்டுகள் ஆகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்..? தமிழ்நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்..? ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை உருவாகியுள்ளது.
மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்த குரலில் நிதியை போராடிப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..!!