ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மற்றும் மின்னணு சாதனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரிடமும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரியாமல், குழந்தைகள் அதிகளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் எவ்வளவு தான் போன்களை பார்த்துக்கொண்டிருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன்பு வரை செல்போன்களை பார்க்கின்றனர். இதையடுத்து, இரவு நேரத்தில் செல்போனை பார்த்துவிட்டு, அப்படியே தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்குகின்றனர். இதனால் பல்வேறு உடல்நலம் பாதிப்புகள் ஏற்படுகிறது.
ஸ்மார்ட் போன்கள் ஆபத்தான கதிர்வீச்சை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது நம் உயிரியல் கடிகாரத்தின் செயல்முறை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் இதனால், நாம் தூங்கும் போது செல்போன் நம் அருகில் இருந்தால், கனவுகள் வருவது, தூங்க முடியாமல் போவது, இரவில் பலமுறை எழுந்திருப்பது போன்றவை ஏற்படுகிறது என்றும் இது மூளையை பாதித்து, வழக்கத்துக்கு மாறான சில குறிப்பிடத்தக்க ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மின்னனு சாதங்கள், புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய, நச்சு விளைவுகளை உருவாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, ஆண்களின் மலட்டுத்தன்மைக்கும், உயிரணுக்களின் தரம் குறைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுமார் 900MHz ஒலிபரப்பு சமிக்ஞையால் கதிர்வீச்சை வெளியிடும் செல்போன்களை நீண்ட நேரம் தலைக்கு அருகில் வைத்திருப்பது தலைவலி, தசை வலி உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதனை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கும்போது ஆப்கள் செயல்பாட்டில் இருப்பதாலும், மின்காந்த கதிர்வீச்சு வெளியேறுவதால் போன் சூடாக இருக்க வாய்ப்புள்ளது. அப்போது காட்டன் துணிகள், தலையணைகள் எளிதாக தீ பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தூங்கும்போது செல்போன்களை ஃபிளைட் மோடில் போட்டு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.