வீர் சாவர்க்கர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் இன்றும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், “வரலாறு தெரியாமல்” ராகுல்காந்தி கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
ராகுல் காந்தி மீண்டும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டால், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
மேலும் “நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக எந்த அறிக்கைகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அடுத்து, மகாத்மா காந்தி ‘பிரிட்டிஷாரின் வேலைக்காரன்’ என்று யாராவது கூறுவார்கள்.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கடுமையாக பேசிய நீதிபதிகள் “உங்கள் கட்சிக்காரருக்கு வைஸ்ராயிடம் பேசும்போது காந்தி ‘உங்கள் உண்மையுள்ள வேலைக்காரன்’ என்றும் பயன்படுத்தினார் என்பது தெரியுமா? உங்கள் கட்சிக்காரருக்கு அவரது தாத்தா பிரதமராக இருந்தபோது, அவரைப் புகழ்ந்து கடிதம் அனுப்பினார் என்பது தெரியுமா?”
அவர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தார்கள், நீங்கள் அவர்களை இப்படித்தான் நடத்துகிறீர்கள். சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பற்றத்தன்மை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற கருத்துகளை வெளியிட வேண்டாம்…” என்று தெரிவித்தனர்.
இருப்பினும், உத்தரபிரதேசத்தில் நிருபேந்திர பாண்டே என்பவர் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ராகுல் காந்தி வி.டி. சாவர்க்கரை “வேண்டுமென்றே” அவமதித்ததாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
இறுதியாக, புகாரை ரத்து செய்ய ராகுல் காந்தியின் மனுவுக்கு பதிலளிக்குமாறு திரு. பாண்டே மற்றும் உ.பி. அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது மகாராஷ்டிராவின் அகோலாவில் நவம்பர் 2022 இல் ராகுல்காந்தி சாவர்க்கர் குறித்து பேசியதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.