அதிகம் பழுத்து தோலில் கருப்பு அல்லது பழுப்பு நிற மாற்றம் அடைந்த வாழைப்பழங்களில் தான் சத்துக்கள் கொட்டி கிடைக்கின்றன. எனவே இதில் அடங்கியுள்ள நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாழைப்பழம் நன்கு பழுக்கும்போது அதில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதனால் வாழைப்பழத்தின் தோலில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். இது என்சைம்களால் நிகழ்கிறது. வாழைப்பழம் பழுக்க பழுக்கத்தான் அதன் இனிப்பு சுவை அதிகமாகும். ரொம்ப பழுத்த வாழைப்பழங்களில் தான் அதிகமாக டிரிப்டோபான் இருக்கிறது. இதனால் நம்முடைய மன அழுத்தமும் பதற்றமும் குறைகிறது. நன்கு பழுத்த வாழைப்பழங்கள் நமக்கு செய்யும் மொத்த நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டால் நெஞ்சுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு அசிட்டிட்டியால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அவர்கள் வாழைப்பழத்தை உண்டால் குணமாகும். அமிலத்தன்மையை குறைக்கும். ரொம்ப பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால், பழுத்த வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ராலைக் கூட கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இருதய நோய்களின் அபாயம் குறையும்.
தசைவலி பிரச்சனை இருந்தால், நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வலியிலிருந்து நிவாரணம் பெற அவற்றைப் பயன்படுத்தலாம். பழுத்த வாழைப்பழங்கள் மலமிளக்கியாகவும் செயல்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் உண்ணலாம். ஆனால் வாழைப்பழமும் பாலும் எடையை கூட்டி விடும் என்பதால் எடை குறைப்பு செய்பவர்கள் கவனமாக எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் உண்ணலாம்.