தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் 14.5 அடி உயர திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

இதனையடுத்து நாகர்கோவில் அருகே காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கானம் லேட்டக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அந்த தொழிற்சாலையில் சுமார் 147 வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வட மாநில தொழிலாளர்களிடம் தொழிற்சாலையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். அதன் பிறகு தமிழகத்தில் நிலவி வரும் சூழல் குறித்த கேட்ட முதல்வர் தைரியமாக இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு மற்றும் உரிய சம்பளம் வழங்கப்படுகின்றனவா? என கேட்டறிந்தார்.