Encounter: சென்னையில் அடுத்தடுத்து 3 ரவுடிகளை என்கவுன்டர் செய்த விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். காவல் ஆணையராக பதவியேற்ற அருண், சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே தனது முதன்மையான பணி என்றும் ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அதே மொழியில் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தார்.
இக்கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கைதான 28 பேர் மற்றும் தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, விசாரணையில் இருந்த ரவுடி திருவேங்கடம், மாதவரம் அருகே என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, வியாசர்பாடியில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்பவர், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதேபோல், ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜாவை கைது செய்த பின், போலீசாரை தாக்கியதாக அவரும் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்தநிலையில், இந்த மூன்று என்கவுன்டர்கள் நடந்த விதம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளதால், காவல்துறை சற்று பதற்றத்தில் இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றனர்.