தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பிரதான சாலை பகுதி டி.எம்.நகர் பகுதியில் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை அமைச்சர் மூர்த்தி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அதன் எதிர்ப்புறம் இருக்கக்கூடிய லேக் ஏரியா குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.50 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட மற்றொரு பாலத்தையும் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘எல்லா மக்களும் எல்லாமும் பெற வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு டி.எம்.நகர் பகுதியில் ரூ.50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒரு புதிய பாலம் மற்றும் லேக் வியூ ஏரியா பகுதியில் தனியார் பங்களிப்பு 50 சதவீதத்தோடு இணைந்து 50 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒரு பாலம் என மொத்தம் 2 பாலங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் பத்திரப்பதிவுத்துறை சம்பந்தமாக பொதுமக்களிடையே நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்’ என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.