Bangalore: பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 110 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் டேங்கர் லாரி தண்ணீர் விலை ரூ. 2000-க்கு விற்கப்பட்டு வருகிறது.
கோடைக்காலம் தொடங்குவதால், பல்வேறு மாநிலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் கைகொடுக்காததாலும், போதுமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆங்காங்கே தண்ணீர் குழாயடியில் மக்கள் வரிசைக்கட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால், டேங்கர் லாரி தண்ணீரை வாங்கி வருகின்றனர். இந்த சூழலில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென கட்டணத்தை உயர்த்தி விட்டனர். கடந்த ஜனவரி மாதம் 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி தண்ணீர் 700 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது 1500 முதல் 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட சில இடங்களில் 2000 ரூபாயை தாண்டி விட்டதாம். இதனால் பொதுமக்களின் சுமை அதிகரித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட்களில் வசிப்போர் தண்ணீர் லாரிகளை தான் பெரிதும் நம்பியிருக்கின்றனர். தற்போதைய சூழலில் சிக்கன நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலேயே நிலைமை இப்படி இருந்தால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களை எப்படி கடப்பது என்ற கலக்கம் உண்டாகியிருக்கிறது.
இதற்கிடையில் டேங்கர் லாரி மாஃபியா கும்பலை அடையாளம் கண்டு கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், போர்வெல்கள் மூலம் அனைத்து டேங்கர் லாரிகளும் மக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்யும் வேலையை மாநில அரசு கண்காணித்து வருகிறது.
மாநகராட்சி இணையதளத்தில் அனைத்து டேங்கர் லாரிகளின் விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் சான்றிதழை எல்லா நேரங்களில் லாரி ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் மொத்தம் 4 ஆயிரம் டேங்கர் லாரிகள் இருக்கின்றன. ஆனால் மாநகராட்சியிடம் வெறும் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே பதிவு செய்துள்ளன.
இந்த விவகாரத்தில் பெங்களூரு மாநகராட்சியும், பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. போர்வெல் தண்ணீருக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள் அன்று பிற்பகல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் விரிவாக ஆலோசனை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் உறுதி அளித்தார்.
Readmore: தண்டனை நிறுத்திவைக்கப்படுமா?… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!… டென்ஷனில் பொன்முடி!