விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு 2ஆம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பதவிக்கான 685 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், இணையதளம் மூலம் விண்ணப்பித்து தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11,117 பேருக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து எழுத்துத் தேர்வு நடத்தியது.
இத்தேர்வில் 9,352 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான மதிப்பெண் நவ.27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்படி, டிச.28ஆம் தேதி முதல் ஓட்டுநர் தேர்வு நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தனர்.