பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. 10 கிமீ தூரம் செல்வதற்கே 30 நிமிடங்கள் வரை ஆகும். இதனால் மக்கள் ஆண்டுக்கு 132 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலுக்காக செலவிடுகின்றனர். பெங்களூருவின் விரைவான வளர்ச்சி மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அதிக வாகனங்கள், மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து நெறிமுறைகள் இல்லாததும் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில், பெங்களூருவில் பயன்படுத்தப்படும் வெளிமாநில வாகனங்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பொதுவாகவே, வாகனங்கள் அங்கு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்தான். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் சாலை வரி செலுத்தப்படுகிறதா..? மாசு கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளதா..? என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது.
அதேபோல், HSRP நம்பர் பிளேட் எனப்படும் உயர் பாதுகாப்பு பதிவுத் தகடுகளை வைத்துள்ளார்களா..? என்றும் சோதிக்கப்படுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால், ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் HSRP பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதியாகும்.
* HSRP நம்பர் பிளேட் என்பது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. இந்த நம்பர் பிளேட்டுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
* அதன்படி, முதலில் https://bookmyhsrp.com என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
* அதில், ‘கலர் ஸ்டிக்கர் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு’ என்பதைத் HSRPஇல் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பிறகு உங்கள் வாகனத்தின் என்ஜின் எண், சேஸ் எண், பதிவு எண், வாகனப் பதிவு நிலை மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அடுத்து, ‘இங்கே கிளிக் செய்யவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
* உங்களுக்கு அருகில் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்து, அப்பாயிண்ட்மெண்ட் ஸ்லாட்டை முன்பதிவு செய்யலாம். அடுத்த பக்கத்தில், கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.
* சரிபார்ப்பிற்காக ரசீது நகல் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த நம்பர் பிளேட்டுகளை பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று விண்ணப்பிக்க வேண்டும்.