வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”மத்திய-மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில் தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் படங்களை நம்பர் போர்டில் எழுதவும் ஸ்டிக்கர் மூலமும் ஒட்டி வருகின்றனர். மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் எழுதி உள்ளனர். இது சட்டவிரோதமானது. இதுகுறித்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக இருக்கும் வாகனத்தின் நம்பர் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும். விதிகளை மீறியிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திலக் குமார், “மனுதாரர் சந்திரசேகர் மாவட்ட நிர்வாகத்தின் மனு கொடுக்கும் போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை சட்டவிரோத நம்பர் போர்டுகளை அகற்றவில்லையெனில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என்பதை சுட்டி காட்டினார்.

இதனை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். ஒரு கோரிக்கை வைக்கும் போது இது போன்று மிரட்டும் தொனியில் மனுவின் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் என கண்டனத்தை தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் அந்த வரியை வேண்டாம் நீக்கிவிடலாம் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் இதை எளிதாக கடந்து போக முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு இதுபோன்று மனுத்தாக்கல் செய்யக்கூடாது என எச்சரித்தனர். மேலும், இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லையெனில் நீங்கள் வெளியே வர முடியாது என்று எங்களை (நீதிபதிகளை ) மிரட்டும் வகையில் உள்ளது என கூறினர்.

மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின் படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு எந்த வகையிலும் எழுத்தோ தலைவர்களின் படமோ நடிகர்களின் படம் இடம்பெற கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வாகன போக்குவரத்து அதிகாரிகள் காவல்துறையினர் இது குறித்து தினந்தோறும் வாகன சோதனை நடத்த வேண்டும். விதிகளை மீறிய நம்பர் போர்டுகளை அகற்ற வேண்டும். விதிமீறிய வண்டிகளை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.