போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக இயக்குநர் அமீர் டெல்லி என்சிபி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜாபர் சாதிக் இப்போது தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் அமீர் தான் இயக்கி வருகிறார். மேலும், அவருடன் இணைந்து ஹோட்டல் மற்றும் சில தொழில்களையும் செய்து வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, போதைப்பொருள் கடத்தலில் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அவர்கள் 3 பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, இன்று ஆஜராகும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் தான் போதைப்பொருள் கடத்தலில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும்.
Read More : பெரும் சோகம்..!! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணை தலைவர் உ.நீலன் காலமானார்..!!