பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் பஞ்ச்வீர் பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளிடம் சோட்டி என்கிற நபர் குடிபோதையில் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால், பயந்துபோன அந்த சிறுமிகள், அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். குடிபோதையில் இருந்த சோட்டி சிறுமிகளை விடாமல் துரத்தியிருக்கிறார். இதில் சிறுமிகள் இருவரும் பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும், கழிவறையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி, கழிவறைக்குள் வைத்து ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர், மற்றொரு சிறுமியையும் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து இருக்கிறார். அதற்குள் அந்த சிறுமி சோட்டியின் பிடியில் இருந்து தப்பி ஓடி இருக்கிறார்.
இதற்கிடையே, சிறுமிகளின் தொடர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமிகளை மீட்டுள்ளனர். பொதுமக்கள் திரண்டு வருவது அறிந்ததும் சோட்டி அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். பின்னர், சிறுமிகள் இருவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சோட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி வளாகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் ஆவேசத்தில் இருப்பதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.