ரேபிடோ ஊழியரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் மது குடித்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததால் இங்கேயே தங்கும்படி தோழி கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சை கேட்காமல் ரேபிடோவில் வீட்டிற்குச் செல்ல புக் செய்துள்ளார். இதையடுத்து, தான் புக் செய்த வாகனத்தில் ஏறி குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என ஓட்டநரிடம் கூறியுள்ளார். ஆனால், ரேபிடோ ஓட்டுநர் இளம் பெண்ணின் நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் காதலியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, காதலியின் உதவியுடன் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அடுத்த நாள்தான் அந்த பெண்ணுக்கு நடந்த அனைத்து சம்பவங்களும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண் தனது நண்பர்கள் உதவியுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இளம்பெண் சொன்ன அடையாளங்களைக் கொண்டு ரேபிடோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சகபுதீன், பெங்களூரு ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் என்பதும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தது 22 வயது பெண் என்பது தெரியவந்தது.

மேலும், ரேபிடோ ஓட்டுநர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதேபோன்று வேறு யாரிடமாவது நடந்து கொண்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரேபிடோ ஊழியரால் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.