கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் என்ஜினில் பறவை இறகுகள் இருப்பதை தென் கொரிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 29 அன்று, தென் கொரியாவின் ஜெஜு ஏர் மூலம் இயக்கப்படும் போயிங் 737-800 விமானம் தரையிறங்கும் போது தென் கொரியாவின் Muan இல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 179 பேர் பலியாகினர். விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு பணியாளர்கள் மட்டுமே உயிர் தப்பினர். விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் பைக்கால் டீலின் இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் இருப்பதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 29 அன்று தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்ட விமானம் தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது திடீரென சறுக்கிய விமானம், விமான நிலைய வேலி மீது மோதியுள்ளது. விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பழுதே விமானம் ரன்வேயில் இறங்கி சரி வர ஓட முடியாமல் போனதற்கு காரணமாக கூறப்பட்டது. விமானத்தின் மீது பறவை மோதியதால் லேண்டிங் கியர் செயல் இழந்ததாகவும், இதனால், லேண்டிங் கியர் இன்றி விமானத்தை தரையிறக்கும் போது இந்த விபத்து நேரிட்டதாக சொல்லப்படுகிறது.
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சேற்று நிலங்கள் மற்றும் கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்த பறவைகளுக்கு விருப்பமான ஓய்வு இடங்கள்.. அங்கு கான்கிரீட் தடுப்பு இல்லாதிருந்தால் பலி எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருந்திருக்காது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்குவதற்கு உதவும் லோக்கலைசர் எனப்படும் நேவிகேஷன் சிஸ்டம் கான்கிரீட் கட்டமைப்பில் இருப்பதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.