விமான பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளதால், இனி விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த போது 2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மீண்டும் விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு சேவையில் குறைந்தபட்சம் ரூ.2,900 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரை நிறுவனங்கள் வசூலிக்கலாம். இந்த கட்டண உச்ச வரம்பை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு நீக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தினசரி தேவை, விமான எரிபொருட்களின் விலையை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா விளக்கம் அளித்துள்ளார். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதை போல், எவ்வித கட்டுப்பாடுமின்றி விமான கட்டணங்கள் உயரும் என்று பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். மறுபுறத்தில் இது பயணிகளை பாதிக்காது என்று விமானத்துறை நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.