கேரளாவில் வாக்குப்பதிவின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 10 பேர் உயிரிழந்தனர்.
பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் வாக்களித்துவிட்டு திரும்பிய வாணிவிலாசினியை சேர்ந்த சந்திரன் என்பவர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தார். காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக ஓட்டப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழாவில் நேற்று முன்தினம் காலை வாக்களித்துவிட்டு திரும்பிய முதியவர் ஒருவரும் உயிரிழந்தார். உயிரிழந்தவர் காக்காழத்தைச் சேர்ந்த பி.சோமராஜன் (வயது 76) என்பது தெரியவந்தது. ஓட்டுச் சாவடி எண் 138ல் வாக்களித்துவிட்டு, திரும்பி வரும் வழியில், ஆட்டோரிக்ஷாவில் ஏறும் போது, தவறி விழுந்தார். அவரும் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கோழிக்கோட்டில் எல்.டி.எஃப்-ன் பூத் ஏஜென்ட் ஒருவரும் இறந்தார். உயிரிழந்தவர் குட்டிச்சிரா மல்லியக்கல் பகுதியை சேர்ந்த அனிஷ் அஹமட் (66) என்பவர் என அடையாளம் காணப்பட்டார். உடனடியாக பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதே போல, திரூர் நிறமருதூர் ஊராட்சியில் உள்ள வல்லிகாஞ்சிரம் பள்ளியில் வாக்குச்சாவடிக்கு முதல் வாக்களிக்கச் சென்ற தட்டாரக்கல் பகுதியைச் சேர்ந்த சித்திக் (63) என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மேலும் நாதாபுரத்தை சேர்ந்த மாமி (65), தொட்டில் பாலத்தை சேர்ந்த பினீஷ் (42), திருச்சூரை சேர்ந்த நாராயணன் (77), இடுக்கியை சேர்ந்த வள்ளி (45) ஆகியோரும் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டு விட்டு சென்ற போது வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்தாத கூறப்படுகிறது. இதனை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.