தபால் அலுவலகத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அவை நம்பகமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தபால் அலுவலகம் மொத்த முதலீட்டு திட்டங்களையும் வழங்குகிறது.. அதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme- MIS).

இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மொத்தத் தொகையை முதலீடு செய்து, அதற்கான வட்டி தொகையை மாத வருமானமாக பெறலாம். ஜனவரி-மார்ச் 2023க்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். நீங்கள் முதலீடு செய்த தொகையை முதிர்வுக்குப் பிறகு திரும்பப் பெறலாம் அல்லது மீண்டும் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றைக் கணக்கிற்கு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2023 பட்ஜெட் உரையில் அறிவித்தார். இருப்பினும், தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,முதலீட்டு வரம்பு இன்னும் அதிகரிக்கப்படவில்லை..
இந்த முதலீட்டு வரம்பு அதிகரித்தவுடன், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்த பிறகு, சுமார் ரூ.9,000 வருமானம் கிடைக்கும்.. அதாவது ரூ.8,875 வட்டியை மாத வருமானமாக பெறலாம். இதன் கீழ், அனைத்து கூட்டு வைத்திருப்பவர்களுக்கும் முதலீட்டில் சம பங்கு இருக்கும். திறக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் மற்றும் முதிர்வு வரை வட்டி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சிங்கிள் கணக்கில் ரூ.9 லட்சம் வைப்புத் தொகை செலுத்தினால், மாதாந்திர வட்டி வருமானம் ரூ.5,325 கிடைக்கும்.. அதே நேரம் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு தொகை செலுத்தினால் மாத வருமானம் ரூ.8,875ஆக இருக்கும்.. இந்த திட்டம் ஒரு நிலையான வருமான திட்டமாக, நீங்கள் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும்..
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, ஒருவர் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்ப நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வழங்க வேண்டும். தனிநபர் நாமினியின் பெயரையும் குறிப்பிட வேண்டும். இந்தக் கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்ச இருப்பு ரூபாய் 1,000 ஆகும், அதை நீங்கள் பணம் அல்லது காசோலை மூலம் செலுத்தலாம்.