சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 111-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 35 கிமீ ஆழத்தில் அதன் மையப்பகுதி கன்சுவின் மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 கிமீ மேற்கு-தென்மேற்கில் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளது. இரண்டு வடமேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரபூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. சீனாவின் பேரிடர் தடுப்பு, குறைப்பு மற்றும் நிவாரணத்திற்கான தேசிய ஆணையம் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம், நிலை-IV பேரிடர் நிவாரண அவசரநிலையை செயல்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.2 ரிக்டர் அளவுகோல் என்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள லின்சியா, கன்சுவில் செவ்வாய்க்கிழமை காலை வெப்பநிலை மைனஸ் 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த வாரம் தொடங்கிய குளிர் அலையானது நாடு முழுவதும் தொடர்ந்து வீசுவதால், சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உறைபனி வெப்பநிலையுடன் போராடி வருகின்றன.
நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதம் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.