அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் அடுத்தடுத்து 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் நேற்று மதியம் 1.19 மணியளவில் 4.9 ரிக்டர் அளவில் பதிவானது. இரண்டாவது முறையாக மதியம் 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் மூன்றாவது முறையாக அந்தமான் நிக்கோபார் தீவின் கடல் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 5.5 மற்றும் 3.9 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 2.26 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் அடுத்தடுத்து 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.