வட இந்திய மாநிலங்களில் அண்மைக்காலமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு 11.11 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் குலுங்கியது. இதனால் நள்ளிரவில் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். சுமார் 20 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக நேற்று அதிகாலை வங்காள விரிகுடா கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியிருந்த நிலையில், மணிப்பூரில் சில மணி நேரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேதேபால், கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.