சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் அரசுப் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நில அதிர்வு உணரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 5-வது தளத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பதறிப்போன மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் வெளியேறினர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய புவியியல் அமைப்பு கூறுகையில், ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், அண்ணாசாலையில் பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, லேசான அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பயிற்சி மையம் கூறுகையில், நில அதிர்வு ஏற்பட்டதாக எண்ணி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மாணவர்களின் நலன் கருதி அடுத்த 2 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதுதொடர்பாக மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த தகவல் அறிந்ததும் சைதாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா..? இல்லையா..? என்பதை விசாரித்து வருகின்றனர்.