மியான்மரில் ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இதுவரை, மியான்மரில் 2,886 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் 4,639 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மியான்மரில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது.
Read more: 200 மில்லியனுக்கும் அதிகமான எக்ஸ் பயனர்களின் மின்னஞ்சல் முகவரி கசிவு..!!