ஜப்பானில் இன்று (ஜனவரி 9) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக கொண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுங்களில் அதிகபட்ச நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 வரை பதிவானது. இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.
வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், புல்லட் ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன. மேலும், இடிபாடுகளில் சிக்கி 125-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஜப்பானில் இன்று (ஜனவரி 9) மீண்டும் ஹோன்சு தீவின் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி ஏற்படும் என மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.