அந்தமானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பாக வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஒரே நாளில் 4 முறையும், அடுத்த நாள் 3 முறை என தொடர்ச்சியாக 7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.