நெய், பலருக்கும் பிடித்த ஒன்று. இதை,சப்பாத்தி, தோசை, சாதம் என்று எதில் வேண்டுமானாலும் நாம் சேர்த்து சாப்பிடலாம். வெண்ணெயில் இருந்து எடுக்கப்படும் நெய், சுவைக்காக மட்டும் இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது. சுத்தமான நெய்யில் ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கும், இதனால் செரிமானத்துக்கு உதவுவது மட்டும் இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க்கும்.
ஆனால் கலப்படமான நெய்யால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். கலப்பட நெய்யில், பெரும்பாலும் ஸ்டார்ச், ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு அல்லது பிற தரம் குறைந்த எண்ணெய்கள் தான் இருக்கும். இதனால், அஜீரணம், வீக்கம், வாயு, வயிறு அசௌகரியம் போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படும். மேலும், கலப்பட நெய்யில் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இதனால், இதய நோய் ஏற்படும் அபாயம் உண்டு.
மேலும், கலப்பட நெய்யால் லேசான தடிப்புகள் முதல் கடுமையான சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படும். மேலும், கண் பார்வை திறன், எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். அது மட்டும் இல்லாமல், கலப்பட நெய்யில் இயல்பான சுவையும், மனமும் இருக்காது. இதனால், முடிந்த வரை உங்கள் நெய் சுத்தமானதா என்பதை தெரிந்துக் கொண்ட பிறகு பயன்படுத்துவது நல்லது.
நெய்யில் கலப்படம் இருக்கிறதா என்பதை வீட்டிலேயே கண்டறிய சில எளிய வழிகள் உள்ளது. ஆம், கலப்படம் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிய உதவும் சில எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்..
உறைபனி சோதனை: இதற்கு முதலில், ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிது நெய்யை ஊற்றி, சில மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். தூய நெய் சீராக கெட்டியாகும், ஆனால் நெய் முழுமையாக கெட்டியாகவில்லை என்றால் அது கலப்படம் செய்யப்பட்ட நெய்.. இதற்கு பதில் நீங்கள் வெப்ப சோதனை செய்யலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். விரைவாக உருகினால் அது தூய நெய், உருக அதிக நேரம் எடுத்தால் அது கலப்படம் செய்யப்பட்ட நெய்.
சிறிதளவு நெய்யில் சில துளிகள் அயோடின் கரைசலைச் சேர்க்கவும். நெய் நீல நிறமாக மாறினால் அது கலப்படமான நெய். இதற்கு பதில், நீங்கள் உங்கள் உள்ளங்கையில் சிறிது நெய்யை வைத்து அப்படியே காத்திருக்கவும். அது உங்கள் உடல் வெப்பத்துக்கு சில நொடிகளில் தானாக உருகினால் அது சுத்தமான நெய். உருகுவதற்கு அதிக நேரம் எடுதால் அது கலப்படமான நெய்.
இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் நெய்யைக் கரைக்கவும். சுத்தமான நெய் மேற்பரப்பில் மிதக்கும், ஆனால் அது தண்ணீரில் கலந்தாலோ அல்லது கீழே மூழ்கினாலோ, அது கலப்படமான நெய்.
Read more: பயணம் செய்தால் வாந்தி வருதா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா உங்களுக்கு வாந்தி வராது!!