’டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி’ என ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டு நெல்லை திரும்பிய மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தர்மலிங்கத்திற்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். தற்போது அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், எடப்பாடி பழனிசாமி கொடுத்த பணத்திற்காக வேலை செய்கிறார்கள். இதனால், தொண்டர்கள் யாரும் எந்த பயனும் அடையவில்லை.

பொதுக்குழுவுக்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் கோடிக்கணக்கில் வாரி இறைத்து செலவு செய்து ஆட்களை திரட்டிய எடப்பாடி, உள்ளாட்சி தேர்தலில் எங்கு சென்றார்? உள்ளாட்சித் தேர்தலில் ஏன் அக்கறை காட்டவில்லை? அந்த தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்க விட்டவர்கள், இன்று தங்களுடைய சுயநலத்திற்காக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர். நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் கோடிக்கணக்கில் எடப்பாடி பழனிசாமி மோசடி செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இதில், அவர் சிறை செல்வது உறுதி. எனவே, ஓபிஎஸ்சின் பின்னால் ஒன்றரை கோடி தொண்டர்களும் வருவார்கள். அதிமுக அவரது தலைமையின் கீழ் வரும். விரைவில் அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்றுவார். அப்போது முக்கிய நிர்வாகிகள் அவரிடம் வந்து இணைவார்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.