அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்றுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றார். திடீர் பயணமாக நண்பகல் டெல்லி புறப்பட்டுச் சென்ற அவர், அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டார். மேலும், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி பயணம் குறித்து நாளை விரிவாக தெரிவிப்பதாக கூறிச் சென்றார். எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாது, அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இருமொழிக் கொள்கை பற்றி அவரிடம் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமித்ஷாவை இன்று இரவு 7 மணிக்கு அவரது இல்லத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக தகவல். சந்திப்பை முடித்துவிட்டு நாளை பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறார்கள்.
Read more: ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்கள் கோகைன் போதை பொருளை விட ஆபத்தானவை..!! – ஆய்வில் தகவல்