போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் பலாத்காரம், பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளி ஆசிரியர்களே மாணவகளிடம் அத்துமீறும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவி ஆசிரியர்களால் பலாத்காரம், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.
இதுதொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் தொடர்பாக வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு நடவடிக்கை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இனி ஆசிரியர்கள் நியமனத்தின்போது, போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.