10க்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பொது சேவை மின்கட்டணம் குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘லிப்ட், மோட்டார் பம்ப்’ போன்றவற்றை உள்ளடக்கிய, ‘காமன் சர்வீஸ்’ எனப்படும் பொது சேவை மின் இணைப்பு இருந்தது. இதற்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய கட்டண சலுகை கிடைத்தது. கடந்த, 2022 செப்டம்பரில் மின் கட்டணத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது. அதில் முதல்முறையாக, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு, மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, ஒரு யூனிட், 8 ரூபாயும்; மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கட்டணம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூக கூடம் ஆகியவற்றிற்கு பொருந்தும். கடந்த ஜூலை முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில் மீண்டும் பொது சேவை பிரிவுக்கான ஒரு யூனிட் கட்டணம், 8.15 ரூபாயாகவும்; நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன. இதனால், குறைந்த வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கட்டணத்தை குறைக்குமாறு, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், 10க்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பொது சேவை மின் கட்டணத்திற்கு பதில், வீட்டு பிரிவிலேயே மின் கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு முடிவு செய்துஉள்ளது. இதுதொடர்பாக, மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசித்து, விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.