திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று போராடி திருமணம் செய்து கொண்டுள்ள கல்லூரி மாணவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் புதுநகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகள் அசீனா (19). பெற்றோர் இல்லாததால் அதே பகுதியில் உள்ள பாட்டி மாலா வீட்டில் தங்கி, கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தென்னரசு (27) என்பவருடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். தென்னரசு பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தென்னரசுவை அசீனா வற்புறுத்தியுள்ளார். ஆனால், தென்னரசு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டாராம். பலமுறை அசினா வற்புறுத்தியும் தென்னரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால், மனமுடைந்த அசீனா, பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார், தென்னரசு மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விளைவாக தென்னரசு, அசீனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, பண்ருட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தென்னரசு, அசீனாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இரு தரப்பு உறவினர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.