ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற்றது. முதலமைச்சர் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கி, முதல் மாநாட்டையும் நடத்தி அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள விஜய், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையான இன்று அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்த துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜை நாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுவரை அண்ணா, பெரியார், அம்பேத்கர் பிறந்த நாட்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார் விஜய். மேலும், காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்தும், தீரன் சின்னமலை, பூலித் தேவர், ஒண்டிவீரன், அழகுமுத்துக் கோன், மருது சகோதரர்கள், முத்தரையர் உள்ளிட்ட போராட்ட வீரர்களுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 2,877 காலியிடங்கள்..!! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..!!