IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று 219 ரண்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.ஜூரல் மிகச் சிறப்பாக விளையாடிய 90 ரன்களில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடியது . இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் போப் ஆகியோரின் வீக்கெட்டை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 19 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் சதம் எடுத்த ஜோ ரூட் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லீ உடன் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியை ஆரம்ப கட்ட சரிவிலிருந்து மீட்க போராடியது. எனினும் அணியின் ஸ்கோர் 65 ஆக இருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் ஜோ ரூட் 11 ரன்களில் அவுட் ஆனார்.
இவரை தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ ஜாக் கிராவ்லீ உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ஜாக் கிராவ்லீ அரை சதம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 60 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த அவர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.
இதன் பிறகு களம் இறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளையில் 120 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. மேலும் அந்த அணி தற்போது வரை 166 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இந்தப் இன்னிங்ஸில்3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தமிழக வீரர் அஸ்வின்(Ashwin) இந்திய மண்ணில் 351 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே 350 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் முறியடித்து இருக்கிறார்.