சென்னையில் பதுங்கியிருந்த ரவுடியை போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்க ஒரு ரவுடி கும்பல் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த தகவல் தனிப்படை போலீசுக்கு தெரியவரவே, உடனே அங்கு விரைந்த போலீசார், தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நெல்லையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு விரைந்த தனிப்படை போலீசார், ரவுடி மகாராஜாவை இன்று அதிகாலை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அப்போது, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே போலீசாரை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் மகாராஜாவின் காலில் சுட்டு, அவரைக் கைது செய்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக ரவுடி மகாராஜா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் கைது நடவடிக்கையின்போது 7-வது குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். ஈரோட்டில் 4 பேர், நெல்லையில் ஒருவர், சிதம்பரத்தில் வியாழக்கிழமை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.