“தமிழ்நாட்டில் இனி திமுகவைத் தேடினாலும் கிடைக்காது” என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளதால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, திமுகவை மிகவும் கடுமையாக தாக்கிப் பேசினார். “தமிழக மக்கள் பாஜக பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன். பாஜக அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஒரே கட்சி பாஜக தான். தமிழக மக்கள் பாஜகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம். மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது எனது உத்தரவாதம். திமுக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட்டை வெளியிட்டுள்ளனர். இந்திய ராக்கெட் இடம்பெறவில்லை. இது, விஞ்ஞானிகள், இந்தியர்களுக்கு அவமானம். இஸ்ரோவின் பெருமையை திமுக, தட்டிப் பறிக்க முயற்சி செய்கிறது.
தமிழர்கள் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவாக இருப்பார்கள். மக்களின் நம்பிக்கையை பாஜக அரசு காப்பாற்றும். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அரசு எந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும், குறை சொல்கிறார்கள். நாட்டைக் கொள்ளை அடிப்பதற்காக வளர்ச்சித் திட்டங்களை தடுத்து வருகின்றனர். தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டவில்லை. உங்கள் வரியை உங்களுக்கே திட்டங்களாக வழங்குகிறோம்.
முன்பு திமுக தலைவர், தனது வாழ்நாள் முழுவதும் தனது மகனை முதல்வராக்க பாடுபட்டார். தற்போதைய முதல்வரும் தனது மகனை முதல்வராக்க முயற்சி செய்கிறார். திமுகவினர் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. ஆனால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பாஜக கவலைப்படுகிறது. திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவியில் உள்ளனர்.
தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுக, காங்கிரஸ் சம்பாதிக்க நினைக்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டால் திமுகவிடம் பதில் இருக்காது. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது. முற்றிலும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சி திமுக” என்று கடுமையாக பேசினார்.
English Summary : Prime Minister Modi’s speech at a public meeting in Nellai
Read More : BJP | ‘நிறைய சிரமங்களுக்கு பிறகு பாஜக குடும்பத்தில் இணைந்துள்ளேன்’..!! விஜயதரணி பேச்சு..!!