குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90-களில் பலரது கனவு கன்னியாக இருந்தவர் மீனா. சாமி படங்களிலும் முக்கிய பங்காற்றினார். அம்மன் வேடம் என்றாலே மீனா தான் எனும் அளவிற்கு அச்சு அசலாக பொருந்தி இருந்தார். பின்னர் திருமணம் குழந்தை என சினிமாவை விட்டு விலகிய மீனாவிற்கு, கம்பேக் படம் என்றால் அது மலையாள படமான த்ரிஷ்யம் தான். இந்த படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்ற படம். ஆனால், மீனா முதலில் இந்த பட வாய்ப்பை வேண்டாம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய நடிகை மீனா, “பல நாட்களுக்கு பின்னர் எனக்கு கம்பேக் கொடுத்த படம் தான் திரிஷ்யம். அந்த படத்தின் கதையை கேட்ட உடன் எனக்கு பிடித்திருந்தது. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளா என்பதால் யோசித்தேன். ஏனெனில், அந்த சமயத்தில் என் குழந்தைக்கு 2 வயது தான் ஆனது. சின்ன குழந்தையை எப்படி தனியாக விட்டுவிட்டு அவ்வளவு தூரம் செல்ல முடியும். எனவே, நான் தயாரிப்பாளரிடம் இந்த சமயத்தில் என்னால் இந்த படம் பண்ண முடியாது என கூறிவிட்டேன்.
ஆனால், மீண்டும் என்னிடம் வந்து பேசிய படக்குழு, அந்த கதாபாத்திரத்தில் உங்களை தவிர வேறு யாரையும் எங்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. நீங்களே நடித்து கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் செய்து தருகிறோம் என்று கூறினார்கள். அதன் பின்னர் தான் நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.