உணவு டெலிவரியின்போது 72% வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளையே தருகின்றனர் என zomato நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அண்மையில் அறிவித்தது ரிசர்வ் வங்கி. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தையும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. அதாவது இன்னும் நான்கு மாதங்களுக்குள் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்ளலாம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சோமேட்டோ நிறுவனம், ரூ. 2,000 நோட்டுக்களை மாற்ற எங்களது நிறுவனத்தில் கேஷ் ஆன் டெலிவரியை பயன்படுத்தி ஆர்டர் செய்யுங்கள் என்று ட்வீட்டரில் பதிவு செய்திருந்தது. இந்த பதிவிற்குப் பின்னர் சோமேட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வழக்கமாக போடும் ஆர்டர்கள் அனைத்துக்கும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தாமல், கேஷ் ஆன் டெலிவரியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சோமேட்டோ நிறுவனத்துக்கு நாடு முழுவதும் ஆர்டர்கள் குவிந்தன.
ஆனால், கிடைக்கும் ஆர்டர்கள் அனைத்திற்குமே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகவே கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் 200 ரூபாய் 300 ரூபாய்க்கு போடும் ஆர்டர்களுக்கு கூட 2,000 ரூபாய் நோட்டுக்களையே கொடுத்து வருகின்றனர். இதனால், ஃபுட் டெலிவரி ஏஜெண்ட்டுகள் சில்லறை கொடுக்க நோட்டுக்கள் இல்லாமல், தவியாய் தவிக்கிறார்களாம். அப்படி, மே 19ஆம் தேதி முதல் நேற்று வரையில் மட்டும் சோமேட்டோ நிறுவனத்துக்கு 72 சதவீத கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கு ரூ.2,000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில்லறையில்லாமல் சோமேட்டோ நிறுவனம் தவித்துவருகிறது.
தங்களின் நிலையை உணர்த்தும் வகையில் 2,000 ரூபாய் நோட்டுக் அடுக்கப்பட்ட ஒரு படுக்கயைில் சோமேட்டோ நிறுவன டெலிவரி மேன் ஒருவர் சோகமாக படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது சோமேட்டோ நிறுவனம். இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சோமேட்டோ நிறுவனத்தின் நிலையை கலாய்த்து மீம்ஸ்களே வரத் தொடங்கியுள்ளன. இதனால் விழி பிதுங்கி நிற்கும் சோமேட்டோ தனது டெலிவரி ஏஜெண்டுகளிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க சொல்கிறார்களாம். ஆனாலும் வாடிக்கையாளர்களை சமாதானம் செய்ய முடியாமலும், 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கொடுக்க முடியாமலும் டெலிவரி ஏஜெண்டுகள் தலை சுற்றி நிற்கிறார்களாம்