தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தற்போதில் இருந்தே தீவிரமாக கூட்டணிக் கணக்குகளை போட்டு பணியாற்றி வருகின்றனர்.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த பாமக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த சூழலில் தான், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 25.4.2025 மாலை 4.30 மணிக்கு மாவட்டக் கட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.